ஒற்றைக் கால் கலி – 2
கலியோடு உடன்பட்டு விட்டான் தர்மன்
முன்பு போல் தூற்றலோ
பெருமூச்சுகளோ இல்லை
தர்மனால் கலியோடு இன்று சாவகாசமாக அமர முடியும்
அதன் தோள்களில் படிந்தமண்ணைத்
தன் கைகள் கொண்டு தட்டி விட முடியும்
ஏதோ விரக்தியில்
தன் மேல் கோபம் கொண்ட நண்பன் போலவே
தர்மன் பதற்றமின்றி கலியைக் காண்கிறான்
கலி அமரும் இடங்களோ விசித்திரமானது
எக்ஸ்பிரஸ் நில்லாத இரயில் நிலைய பிளாட்பாரம்
அதன் கடைக் கோடியில்
ஊசிக் கூரென இரும்பு வேலிகளின் நிழலில்
கால்களை மடக்கிக் கொண்டு
தலை குப்புற மடித்து
பகலின் தனிமையில் கலி பொதுவாக அமர்ந்திருப்பான்
காலத்தில் கலி தாழ்ந்தவனாம்
கருத்தும் போய் விட்டான் காலப் போக்கில்
அவன் அழுக்கை கரைக்கும் மழையும் பெய்வதாயில்லை
கலி இத்தனைக்கும் சிறுவன், துறத்தப்பட்டவன்
தர்மன் கலியை தழுவும் போதெல்லாம்
இரும்பு வேலிகளின் நிழலை
ஓர் வெண் ஒளி சூழும் உணர்வை
கண்டவர் கொள்வர்
கலி எழக் கூடும்
அல்லது இரும்பு வேலியின் நிழலில்
தன் உருவை மறைத்த படி
‘எல்லாம் கலி காலம்’ என்னும்
பழியை ஏற்றுக் கொண்டு
அமைதியாக காலம் கடத்தக் கூடும்
கண்களில் நீர் ததும்ப
கலி என்னும் அச்சிறுவனுக்காக
தர்மன்
ஒற்றைக் காலோடு தவத்தில் நிற்கிறான்
– ஆர். கே.ஜி.
3 thoughts on “ஒற்றைக் கால் கலி – 2”