இன்றைய நவீன ரசிகன், கலைகளுக்கு நோக்கங்களை திணித்து விடுகிறான்.
எழுத்தை எடுத்து கொண்டால், நிகழ் காலத்தை, யதார்த்தத்தைத் துல்லியமாக எழுதியே ஆக வேண்டும். அரசியல் பேசியே ஆக வேண்டும்.
இசையென்றால், சிறு வட்டம் கடந்து, அனைவருக்கும் போய் சேர வேண்டும். மொழியைக் கடக்க வேண்டும். இப்படி அடுக்கடுக்கான சோஷியலிஸ சித்தாந்தங்கள்.
நம் சமூகம், சித்தாந்தங்கள் பேசி, ‘கருத்து’ என்ற அளவில் நுண் உணர்வை தொலைத்து, பெரும்பாலும் நம்பிக்கையற்ற ஊக்கமற்ற சமூதாயமாக எதிலும் தொடர்பில்லாததாக இயங்கி வருகிறது. மந்தமாக எங்கெங்கோ வாசகங்களைப் பொறுக்கி, நுண் கலைகளை கொல்ல கோடாரியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறது.
உண்மையில் இவர்கள் தொடர்பில்லாமல் இருக்கத் தான் செய்வார்கள். காரணம், உழைப்பை தந்து அடையாளமின்றி போகக் கூடியத் திரானி இவர்களிடம் இல்லை.
இவர்களுக்கு தேவை ஒரு கருத்து. வாசகங்கள் தரக் கூடிய கிளர்ச்சியில் புரளும் புழுக்கள். பொருட்படுத்தக் கூடிய ஒரு செயல் இந்த சனத்திடம் நாம் எதிர் பார்ப்பதற்கில்லை. சிந்தனை பயிற்சியால் மட்டுமே தாண்டக் கூடியப் படிகளை இவர்கள் ஏற மாட்டார்கள்.
மரபு சார்ந்தப் பல கல்விகளை நாம் காற்றில் விட்டாகிவிட்டது. நம்மில் எத்தனை பேர் மிக நெருக்கத்துடன் ஒரு நுண் கலையை தொடர்ந்து பயின்று அதை அடுத்த தளத்திற்கு நகர்த்த முனைகிறோம்.
எதிலும் இறங்க மாட்டோம். ஆனால் மரபை, பின் தங்கிய ஆசாரக் கூடம் என உமிழ்வோம்.
எக்காலத்திலும் நுண் கலை மக்கள் இயக்கம் ஆக வழி இல்லை. நுண் கலைகளை அவற்றின் பயனைக் கண்டு எடை போடுவது அடி முட்டாள் தனம். (சமீப கர்நாடக இசை சர்ச்சை உதாரணம்)
ஏசுவுக்குப் பாடினால் சங்கீதம் அழிந்து போகும் என்ற தரப்பின் வாதத்திலும் சரி, மாதம் ஒரு முறை இஸ்லாமிய, ஏசு பாடல்களைப் பாடியே தீர்வேன் என்ற எதிர் வாதத்திலும் தெரிவது என்னவோ அபத்தம் தான். காரணம், இரு தரப்பும் ஏதோ ஒரு நோக்கத்தை கலை மீது திணிக்கிறார்கள். எந்த ஒரு கலையும் தன்னளவில் நிகழ்கிறது. கலைஞனின் முழு பிரக்ஞையோடு, தனிமையில் அவனும், அவன் மட்டுமே எஞ்ச.
அடுத்தவனுக்காகப் பாடினேன், எழுதினேன், அதனால் கலையின் உச்சத்தைத் தொட்டேன் என எவரேனும் சொல்ல சொல்லுங்கள். அப்படி பறை சாற்றினால், அவன் தம்மட்டக் குஞ்சு என கண் மூடி சொல்லலாம். படைப்பு பெரும்பாலும் தனிமையில், சுயநலத்தோடு தான் நிகழ்கிறது. பிறரிடம் பேசி பேசி தீர்த்தப் பின், தனக்குள் பேசவே ஒருவன் முனைவான். அவ்வழியில் மட்டுமே, ஒருவன் கூர்மை அடைவான்.
பல் பரிணாமம் கொண்ட எப்படைப்பும், அனுகுவதற்கு கடினமாகத் தான் இருக்கும். நம் சோம்பேரித்தனத்தை அதன் மீது அப்பி, எச்சில் உமிழ்ந்தால்?
அடித்து போகும் வெள்ளத்தில், பிய்த்து போகும் புல் போன்றதே நம் கேள்வி ஞானம். இசையில் மூழ்கி விட்டேன் என சொல்லாத ஒரு ரசிகனை சொல்லுங்கள். எந்நேரமும் நம் மனம் சரண மார்கத்தில் தான் உறங்கி பிறள்கிறது. இப்படி இருக்க, ஏதோ நடு நிலையாக இசை அந்த திசையில் செல்ல வேண்டும், இப்படி பாட வேண்டும், இதற்காகப் பாட வேண்டும் என்ற வெற்று கூற்று மட்டும் எதற்கு?
இந்த எரிச்சல் தணிய, சிறிது ஆசுவாசமாக அமைந்தது ஏ.ஆர். ரஹ்மான் அமேசான் பிரைம் (Amazon Prime) இல் வெளியிட்ட ‘ஹார்மனி’ இசைத் தொடர்.
‘ஹார்மனி’ மரபு வழி வந்த இசைக் கலைஞர்களை ஒருங்கிணைக்க எடுத்த ஒரு அரிய முயற்சி.
கேரளத்திலிருந்து முழவு கலைஞர், மும்பையிலிருந்து ருத்ர வீணை கலைஞர், மனிப்பூர், சிக்கிம்மின் நாட்டுப்புற கலைஞர்களென, இந்தியாவின் பெரும் மரபிசை பரப்பு ஒரு குடைக் கீழ்.
துருபத் (Drupad) மரபை சேர்ந்த ருத்ர வீணை கலைஞர் உஸ்தாத். (Ustad Mohi Baha’uddin Dagar)
உஸ்தாத் மும்பையின் நேஷனல் கேலரியில் (National Gallery of Modern Art), காட்சிக்கு வைத்திருந்த ஓவியங்கள் மூலம் இசையை அவதானிக்கும் காட்சி அழகான சித்தரிப்பு.
இசைப்பவன் கேட்பவனுக்கு ஏதோ ஒருபடிமத்தை நிகழ்த்துகிறான். ஓவியனும் தூரிகையை ஏதோ ஒரு இசைக்கேற்ப வளைத்திருக்கக் கூடும். இரண்டு கண்ணாடிகள் ஒன்றோடு ஒன்று வைத்தது போல், எண்ணிலா படிமங்கள் காலமற்ற வெளியில். ஒரு படிமத்திலுருந்து இன்னொரு படிமம். இதில் இசைப்பவன் யார், வரைந்தவன் யார் என்ற தேடலின் பொருள் என்ன்?
ரஹ்மான் உஸ்தாதிடம், ருத்ர வீணைக்கு நெருக்கமான ராகமாக எதை உணர்வதாகக் கேட்கிறார்.
துருபத் முறையில், ராக அனுபவத்திற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் வீணையுடன் செலவிடக் கூடும் என சொல்லி, தோடி ராகத்தை பதிலாக மொழிகிறார்.இன்றைய ‘கருத்து குஞ்சு’ களுக்கு வியர்த்து போகக் கூடிய ஒன்று இது. காரணம் அவர்கள் கைகளில் சொற்கள் தான் எஞ்சி இருக்கின்றன. உஸ்தாத் அனுபவித்த அந்த உச்சம், சொல்ல முடியாது அவருக்கு மட்டுமே அமைவதாக இருக்கக் கூடும். ஆனால் தப்பில்லை. அதை அனுபவிக்க அவருக்கு மட்டுமே யோக்கியம் என்று தோன்றுகிறது. எதிலும் ஆழாத வாய் சவடால்களுக்கு எதற்கு?
சிக்கிம் சேர்ந்த லேப்சாவும் (Mickma Tshering Lepcha) தான் வாசிக்கும் குழல் மூலம், மலையின் சூழலை சிருஷ்டிக்க முடியும் என நம்புகிறார்.
முழவு இசை கேரளத்தில், நாயர்களுக்கும் நம்பியார்களுக்கும் மட்டுமே ஆன கோவில் கலையாக இருக்க, ஒரு முன்னோடி அதைப் பொறுப்பாக அனைவருக்கும் சேர்த்திருக்கிறார். நிகழ்ச்சியில் வரும் சஜீத், கலாமண்டலத்தில் அவரிடம் பயின்றவர். தமிழ்நாட்டில் இத்தகு இயக்கங்கள் வெற்றி கண்டதாக சொல்வதிற்கில்லை. முயற்சிகள் சிறு அளவில் நடந்துள்ளன.
கலைகள் பல சேர்ந்தாலும், ‘fusion’ என்ற வார்த்தையை ரஹ்மான் தவிர்க்கிறார். அவர் சொல்லும் ‘Conversation’, உரையாடல் என்னும் பிரயோகம், பல நெருடல்களைத் தவிர்க்கக் கூடும் .
எந்த மரபிசையும் தன் நிலை இழக்காமல், உரையாடினால் மட்டுமே போதுமானது!
ரஹ்மானால் இசையை மிகவும் கன்னியமாக அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல முடியும் என்பதை ‘ஹார்மனி’ தொடர் மீண்டும் உணர்த்தியது.
– ஆர். கே. ஜி.
“In Mumbai, Rahman acknowledges that it’s a gift when a musician, despite the dirt and clutter can ‘internalise and produce beautiful music. As if to prove him right, Dagar plays the veena and the single note is so meditative that Rahman sits as if in prayer, his eyes half-closed.”
Watch out Harmony @ Amazon Prime
Music: A. R. Rahman
Directed by Sruthi Harihara Subramanian
Produced by Kavithalaya
https://thewire.in/the-arts/harmony-ar-rahman-amazon-series-music
https://www.thehindu.com/entertainment/music/i-like-silence-ar-rahman/article24591297.ece