கவி யானை – மனுஷ்யபுத்திரன்

“மனுஷ்யபுத்திரனின் கவிதையை வாசிப்பது எளிதானதில்லை. சொற்கள் கையில் எடுக்கமுடியாத பாதரசம் போல ஒடுகின்றன. மீறி கையில் ஏந்திவிட்டால் அதன் கனம் தாள முடியாததாகிவிடுகிறது.”

       – எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.

சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைப்பெற்று வரும் புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன். நூல் பதிப்பகத்தார் நடத்துவது.

சாரு நிவேதிதா தினமும் எழுதி வருவது போல, தாவரங்கள், பறவைகள் என இயற்கையின் மிச்ச சிருஷ்டிகளை ஆவலோடு நெருங்கத் தொடங்கியுள்ளேன். விதி விலக்காக, நாய்களை மட்டும்  எக்காலத்திலும் கொஞ்சுவதாக இல்லை.

தியோடர் பாஸ்கரன் சூழியல் குறித்து பல தளங்களில இயற்கையின் அவதானிப்புகளை எழுதி வருகிறார். அவர் புத்தகங்களை வாங்க உயிர்மை பதிப்பகத்திற்கு சென்றேன். வாசலில் மனுஷ்யபுத்திரன், டீ சாப்பிட்டபடி அமர்ந்திருந்தார்.

கடையில் முதல் அலமாரியில், ‘இருளில் நகரும் யானை’. 2016 ல் வெளி வந்த மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு. வலி, துயரம், தனிமை … இவற்றை மெல்லிய எள்ளலுடன், கவித்துவமாக படைத்திருக்கிறார். 2016ல் சென்னை எதிர் கொண்ட வர்தா புயலின் படிமங்களும் கூடுதலாக.

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் என்றுமே சிக்கல் இருந்ததாகத் தெரியவில்லை. இனி இருக்கவும் வாய்ப்புகள் குறைவே. பெரும்பாலும், அலட்டாமல் எழுதினாலும், அவரின் பல கவிதைகள் எந்த தீவிர இலக்கிய அரங்கிலும் வாதிடக் கூடியவை.

சிக்கல் அவர் தம்மை காண்பித்துக் கொள்ள விரும்பும் பிம்பத்தில் தான். நான் இவற்றின் பிரதிநிதி, நான் இவற்றை நம்புகிறேன் போன்ற நிலைப்பாடுகளில். எந்த கலைஞனக்கும் இந்த ‘branding’ தேவையில்லை.

என் அளவில், எழுத்திற்கு ஏதாவது நோக்கம் இருக்குமேயானால், ‘நான்’ என்னும் பிரக்ஞை கடப்பது. இதற்கு பல நாம கரணங்கள் சூட்டலாம். ஆனால் அடித்தளம் இதுவே. தன் நிலையைப் புறத்தோடு அறிதல். அகம் புறம் என்ற வெற்றுக் கோடுகளை அழித்தல்.

கவிதையால் காட்டுத் தீயை செம்மைப் படுத்தி, மெழுவர்த்தியின் நிதானத்திற்கு கொண்டு வர முடியும். அதனால் தான் என்னவோ கவிஞர்கள் கனிந்தவர்கள் ஆகிறார்கள். மகா கவி போன்ற ரௌத்திரர்கள் எக்காலத்திலும் குறைவே.

தாமரை இலையில்

தண்ணீரைப் போல மாறிவிட்டேன் என்கிறார்கள்.

இப்போதெல்லாம்

அந்தத் தாமரை இலை கூட எனக்கு இல்லை.

காற்றில் அந்தரமாய்

பறந்து கொணடிருக்கிறேன்

ஒரு நீர்த்துளியாக.

(தொகுப்பிலிருந்து)

                                       irulil-nagarum-yanai__72645_zoom-500x500_0.jpg

‘இருளில் நகரும் யானை’ யில், இப்படி அசாத்தியமானக் கவிதைகள் பல. அதிலும் அரை ஆண்டில் அவ்வளவையும் தரமாக எழுதிக் குவித்திருக்கிறார். அந்தரங்கமாக கவிக்கென ஒரு உலகம் இல்லையென்றால், இவை நிகழ வாய்ப்பில்லை. மனுஷ்யபுத்திரனின் இடத்தை, உலகத்தை அவர் சொல்லாலே நாம் அடையாளம் கொள்ளலாம்.

“கவிதையை நான் ஒரு தவமாகக் கருதுபவன் அல்ல. மாறாக, அது ஒரு இடையறாத நடனம்.”

மனுஷ்யபுத்திரன் சொல்வதைப் போல, நடனம் தான். ஆனால் கவிதை இடையறாத யோகியின் சித்த நடனம்.

சிறு காலத்தில், இவ்வளவு உச்ச கணங்களை எட்ட முடியும் என்றால், பருந்து போல் இவர் பெரிய உயரம் தொட விழையவில்லை என்பது தெளிவாகிறது. தன் அளவில், தன் சுற்றத்தில் கண்டவை வைத்து, தன் சிறு சிறகுகளை அசைத்து, தனக்கு அடுத்த வானில் பறக்கிறார். நமக்கும் எட்டும் தூரத்தில்.

அதான் இவ்வளவு எழுதிகிறாரே, பிரச்சனை என்ன எனக் கேட்டால், கவிதை தொகுப்பின் அதே வரிசையில் அடுக்கப்பட்டுள்ள புத்தகம், துர்கா ஸ்டாலின் தி.மு.க செயல் தலைவர் குறித்து எழுதிய ‘அவரும் நானும்’. இதுவும் உயிர்மை வெளியீடு.

உயிர்மை பதிப்பக அட்டவணையில், சுஜாதா, தியோடர் பாஸ்கரன், மனுஷ்யபுத்திரன் போக இன்று துர்கா ஸ்டாலின்!

    manushyaputhiran.jpg                                   TA045114.jpg

மனுஷ்யபுத்திரன் இன்னும் டீ கோப்பையை முடித்ததாகத் தெரியவில்லை.

உண்மையாக என்னால் அந்த தர்ம சங்கடத்தை கையாள முடியவில்லை. எனக்கு வெகு சமீபத்தில் ஒரு மகத்தான கவிஞன் அமர்ந்திருக்கிறான். ஆனால், அவன் கைகளில் முத்தமிடுவதா, இல்லை அறைவதா என்றே புரியவில்லை.

பத்து கவிதைகளை அங்கேயே நின்ற படி வாசித்து முடித்தேன். துர்கா ஸ்டாலின் வேறு, மொத்த கலாச்சாரத்தையும் தன் தோளில் தாங்கி, புத்தக அட்டையில் பவ்யமாக நின்று கொண்டிருந்தார். நல்ல திராவிட – இந்து சங்கமம் அவர் ஒருவரில் தான் நம்மால் அடைய முடிந்தது.

சொல்ல முடியாது. நாளை நானும் ஒரு பக்கம் தீவிரமாக எழுதிக் கொண்டு, மறு பக்கம் இப்படி சில்லரைத் தனமாக ஏதாவது செய்யக் கூடும். ஆனால் இந்த சேட்டைகளுக்காக ஒரு மகா கலைஞனை  தண்டிக்க வேண்டுமா என்பது தான் குழப்பம்.

போதாதென்று அவ்வப்போது இந்த ‘மாதவிடாய்’ கவிதைகள் வேறு, நம் மக்களை ஏத்தி விட.

நான் சொல்ல விழைவது, மனுஷ்யபுத்திரனை திராவிட கழகம், தொலைக்காட்சி என அனுகியவர்கள், அவரின் மிக ஆபாச சித்தரிப்பை மட்டுமே கண்டிருக்கக் கூடும். இத்தரப்பின் வாதம், அவர் இலக்கியத்தில் வகிக்கும் இடத்தை நோக்கி இம்மி அளவும் நகர்ந்ததில்லை.

எழுத்தாளனை அவன் எழுத்தில் மட்டும் கண்டடைய முனைந்தால், இவ்வகை தர்ம சங்கடங்களை நாம் தவிர்க்கலாம். (எனக்கும் சேர்த்து சொல்கிறேன்)

“எப்போதும் கவிதையிடமிருந்து சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தான் பெரும்பான்மை வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். உலகம் தனக்குத் தராத, அனுமதிக்காத சந்தோஷங்களைக் கவிஞர்கள் தந்துவிடுவார்கள் என நம்புகிறார்கள்.”

எஸ். ரா சொல்வது போல, இதுவே கவிஞனின் தொழில்! மிச்சது பார்ட் டைம் தான்.

‘அவரும் நானும்’ எரிச்சலில், கவிதைத் தொகுப்பை வாங்கினேனா இல்லையா என்பதை உங்கள் கணிப்பிற்கே  விட்டு விடுகிறேன். தியோடரின் ஒரு புத்தகம் கிட்டியது.

– ஆர்.கே.ஜி

https://tamil.thehindu.com/general/literature/கவிதை-என்பது-தவம்-அல்ல-இடையறாத-நடனம்-மனுஷ்யபுத்திரன்-நேர்காணல்/article9443217.ece

http://www.sramakrishnan.com/?p=5899

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: