இருளில் கால் துண்டித்த
ஒற்றைக் கால் பசுவாக
அனாதையாய்
கண்ணில் நீர் சுர நிற்கிறான் தர்மன்
தெறித்த இரத்தத் துளிகள்
இருளில் மின்னும் தாரைப் போல
அவன் சுற்றிய திக்கெங்கும்
சாட்சியாய்
தர்மனும் சாதாரணன் தான்
ஏனோ,
நாம் அனாயாசமாய்க் கடந்த சொற்களை
ஆப்தமாய், தியானித்து பிதற்றியிருப்பான்
பெரும்பாலும் அர்த்தமற்ற
வாழ்ந்தொடிந்தோர்களின் தத்துவங்களை
மறு வாழ்வு தந்தே தீருவேன் என
உச்சிக் கொம்பில் நின்றிருப்பான்
ஏதோ ஒரு பொழுதில்
அறத்தின் தேவையை சுகத்தை உணர்ந்திருப்பான்
பின் கடக்கவும் முடியாமல் அதன் வழி நிற்கவும் முடியாமல்
பித்தனாக … “நான் இப்படி தான்” என பேசியிருப்பான்
பின் சீண்டலில்லை என்பது தெரிந்து
மௌன குருவென அமர்ந்திருப்பான்
இரவுகள் தர்மனைக் கூறு போட
பொதி இருளை சுமந்து வரும்
கழுகுகள் அங்கிங்கு வெட்ட வானில்
அமைதியாய் தம் இறைக்கென காத்திருக்கும்
அந்நொடியிலும் தர்மன் சாவிற்கு அஞ்சாதவன் போல்
சுவற்றில் ஒட்டிய
சுவரொட்டிகளின் சுரசுரப்பில்
முதுகைத் தேய்த்து ஆசுவாசிப்பான்
அக்கணம் தெரியா திக்கிலிருந்து
தோட்டாக்கள் மழையாய் பாயும்
கால் நொண்டி
ஒற்றைக் கால் தர்மன் அக்கணம் நாதியற்று ஓடுவான்
இருளோடு இருளாக அடர்ந்த புருவங்களுடன்
அமைதியாய் அத்தனையும் பார்த்திருந்த கலியோ
பிணந்திண்ணிகளுக்கு கண் சிமிட்டி
கைகொட்டி குலுங்கும்
மேலும் ஓட முடியாமல்
தர்மன் மூச்சிறைத்து நிற்பான்
ஒற்றைக் காலை
இரத்தக் குளியலில் சரிப்பான்
ஏதோ ஒரு தர்ம வாக்கியத்தை சபித்து
மொத்த மனுசர் குலத்தையும் தூற்றி சாவான்
பொழுது புலர
தர்மனை கொத்தித் தின்ற கழுகுகள்
அலட்டாமல் வான் ஏறும்
– ஆர்.கே.ஜி
4 thoughts on “ஒற்றைக் கால் கலி – 1”