அர்ஜுனின் பூர்விகம் திருபெரும்புதூர். தந்தை அனிருத்தனுடன், பெரும்புதூரில் உள்ள தன் தாத்தன் வீட்டிற்கு ஆதிரை நட்சத்திரம் தோறும், மாதம் ஒரு முறையாவது சென்று வருவது வழக்கம். ஆதிரை ராமானுஜரின் திருநட்சத்திரம். பெரும்புதூரில் பட்சி தாத்தா மிகப் பிரசித்தம். கோவிலடி மேற்கு வீதியில் வீடு. தேசிகர் பிரபந்தங்கள், வைகானசம், ஶ்ரீபாஷ்யம் என கரை கண்டவர். தினம் பன்னிரு நாமங்களை மேனியில் இட்டு, பெருமானே தமக்கு காப்பு என வாழ்பவர்.
அர்ஜுனுக்கு பட்சி தாத்தா பேருக்கு ஏற்றார் போல் கருடானாகத் தான் தெரிவார். கூர் மூக்கு, தீர்கமானப் பார்வை, மெலிந்த உடல், எக்கணமும் நாவில் நாரணன் நாமம் என பட்சி தாத்தா இன்று வாழும், பழுத்த பெரிய திருவடி. எப்பொழுது அனிருத்தனை பார்த்தாலும், “எப்போ உன் பையனுக்கு பஞ்ச சம்ஸ்காரம் பன்னப் போறே? வைஷ்ணாவாள்லாம் சுவதர்மத்த விட்டு கொடுத்தாச்சு. அப்புறம் வரதன தண்ணிக்குள்ள காலத்துக்கும் தூங்க வெக்க வேண்டி தான்.”
பட்சி தாத்தாவின் பேச்சில் உண்மை தெரிந்து, அனிருத்தனும் அர்ஜுனும் எதிர்க்க மாட்டார்கள். அனிருத்தனின் மனைவி வித்யாவிற்கு கோவில் விசாரங்களில் சிறிதும் ஈடுபாடில்லை. ஸ்டேட் கவர்மெண்டில் சீனியர் அஸிஸ்டெண்ட். அதனால் வேலையை சாக்காக வைத்து, இந்த பிரயானங்களைத் தவிர்த்து விடுவாள்.
திருவாதிரை என்பதால் அன்று மாலை புறப்பாடு இருந்தது. திருபெரும்பதூர் உடையவரின் ஊர். புறப்பாட்டிற்கு முன் வீதிகளை சுத்தம் செய்து, சாணத்தால் மெழுகி, கோலமிட்டு வீட்டின் முன் மாமிகள் பலர் ஒன்பது கசத்தோடு, நாமன் இட்டு காத்திருந்தனர். குறுகிய தார் தெருக்கள் நீர் தெளிப்பதால் மென் நெடி தந்தது. பெரும்பாலும் ஐம்பதைக் கடந்தவர்களே வீதிகளில் தென்படுவர். அவ்வப்பொழுது, சென்னையில் ஐ.டி.யில் வேலை செய்யும் ஒன்றிரண்டு இளைஞர்களும் புறப்பாட்டில் கலந்து கொள்வர். அர்ஜுனின் தோழனான இரங்கன் அன்றைய புறப்பாட்டிற்கு வந்ததாகத் தெரியவில்லை. அவனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டி விட்டான்.
உடையவரின் உற்சவ விக்கிரகம், கோபுரத்தின் முன் மண்டபத்தில் எழுந்தருளப்பட்டது. பட்சி உடையவரின் செப்பு மேனி முன் வினயமாக நின்றார். அவரை இரு பக்கமும் அனிருத்தனும், அர்ஜுனும் தாங்க வேண்டியதாக இருந்தது. பட்டாச்சாரியார் மாலையிட்டு, மந்திரங்கள் ஓதி புறப்பாடிற்கு வேண்டியவை செய்தார்.
பட்சி வைணவம் ஏதோ ஒருவர்க்கு கடன் பட்டதெனில், அது இராமானுசர்க்கே என்று திடமாக நம்பினார். எப்பொழுதும் அடியேன் எனவே தம்மை விளித்து கொண்டார். தாஸ்ய பாவத்தில் அதிக ஈடுபாடு உண்டு. பட்டாச்சாரியர் பட்சியை வணங்கி, புறப்பாட்டைத் தொடங்க உத்தரவு கேட்டனர். இதை அவர்கள் செய்ய வேண்டியதில்லை. இருந்தும், எண்பதைக் கடந்த பட்சியின் மீது பெரும் மதிப்பு இருந்தது.
“அடியேன் நான் என்ன சொல்ல … புறப்படுவோம்!”
முன் மண்டபம் கடக்க, மாலை வெயிலின் சிதரல் பட்டு உடையவரின் செப்பு மேனி பொலிந்தது. மாலையாக சிவந்த புஷ்பங்கள் வெயிலின் கிரணங்களோடு சூட்டப்பட்டது.
எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.
திருவரங்கத்தமுதனாரின் இராமானுச நூற்றந்தாதியை உடையவரின் புறப்பாடுகளில் ஓதுவது வழக்கம். பாசுரம் பாடப்படும் காலங்களில் எல்லாம் பட்சியின் கண்கள் கலங்கும். ‘எனக்குற்ற செல்வம் இராமானுசன்’. இத் தொடரை ருத்திராட்சமாக மனதுள் உருட்டி, உடையவரின் திவ்ய மேனியின் முன் பல காலம் அவர் நின்றதுண்டு.
அர்ஜுன் அங்கு நிகழ்பவற்றை அமைதியாகப் பார்த்தான். பெரும் கூட்டம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இருப்பவர் கண்களில் அத்தனை ஈடுபாடு! தவிலும், நாதஸ்வரமும் முன்னர் செல்ல, யானை அவர்களைத் தொடர்ந்தது. காதுகளைக் கணக்காக ஆட்டி, கால்களை அளந்து வைத்து நடந்தது. பாகன் அதன் சிரமத்தை உணர்ந்து அதட்டாமல் தொடர்ந்தான். யானைக்குப் பின் வேத கோஷ்டி. குரலில் எழுந்த நூற்றந்தாதி, கேட்பவரை உருக்கியது. வானம் இருண்ட அந்நொடியில், மங்கு ஒளி சூழ ஊர்வலம் கூரத்தாழ்வான் சந்நிதியில் நின்றது. பட்டர்களின் மரியாதையை ஏற்றப் பின், மணவாள மாமுனி மடம். மட வாசலில் இராமானுசரும் கோஷ்டியும் சிறிது நேரம் ஆசுவாசித்தனர்.
அர்ஜுனுக்கு பட்சி தாத்தா இராமானுசரை காணும் தொரும், அவர் கண்களில் மின்னும் கனிவை, உண்மையை அவ்வளவு எளிதாக அர்ஜுனால் கடக்க இயலவில்லை. அவன் தலைமுறைக்கு கூகுளாச்சர்யன் ஒருவன் மட்டுமே. தயக்கமின்றி எதைக்கேட்டாலும் தரக் கூடிய கலி கால ரிஷி. அர்ஜுன் ‘ஶ்ரீ குண ரத்ன கோசம்’ போன்ற வைணவஇலக்கியங்களை இணையத்தில் படித்து தாத்தாவிடம் ஆர்வமாகப் பகிர்ந்து கொள்வான்.
“பெருமாள் இண்டர்னெட்ல காட்சி கொடுக்க மாட்டார்டா.” இதை நூறு முறையேனும் பதிலாக கேட்டிருப்பான்.
பட்சி தாத்தாவின் வாழ்வைத் தொகுத்தால், அவர் பெருமானுக்கு தாஸ்யனாக இருந்தார் என்பதைக் கடந்து ஒன்றும் சொல்வதிற்கில்லை. தாத்தாவை சுற்றி துளசி நெடி தான்.
அவர் எந்த உறவிற்கும், ஏன் மகன் பேரனுக்குக் கூட, பெருமானுக்குத் தந்த இடத்தைத் தரவில்லை. காலம் சென்ற ராஜம் பாட்டி தாத்தாவிடம் எவ்வளவு நெருங்க முடிந்தது எனக் கணிப்பதற்கில்லை.
யானையும் கோவிலின் மதில் நிழலில் இளைப்பாறியது. அதற்கு கூட்டம் பிடிப்பதாகத் தெரியவில்லை. யானையின் சிறு அசைவும் நிகழ்த்தப்பட்டதாகவே அர்ஜுன் உணர்ந்தான். முதிர்வில் அதன் கண்கள் காட்சிகளால் பழுத்தனப் போல வழ வழப்பாய் தோன்றியது.
ஆனையைப் பார்க்க, அர்ஜுனுக்கு நம்மாழ்வாரின் பாசுரம் நினைவிற்கு வந்தது.
ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும்
நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும்
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே
ஏறியது பித்து. பித்து … ஒன்றை மட்டுமே ஏற்கும். ஒன்றை மட்டுமே சாசுவதமாய் கொள்ளும். ஒன்றையே துதிக்கும். அம் மகத்தான ஒருமையில் பன்மைக்கு இடம் இல்லை.
அர்ஜுன் அவன் முன்னோர் சொன்ன சரணாகதியை ஏற்க உவந்தான். ‘மாம் ஏக’. பித்தர் படைக்கு என்றே சரண வாக்கியங்கள் எழுதாகிவிட்டது. அர்ஜுன் பட்சி தாத்தாவை நெருங்கினான்.
“அப்பாவ விடுங்கோ தாத்தா. நான் பஞ்ச ஸம்ஸ்காரம் பன்னிக்க்கறேன்.”
பட்சி கண்கள் கலங்கி, சடாரியை பட்டாச்சாரியிடம் வாங்கி அர்ஜுனின் சிரசில் வைத்தார்.
பித்தேறியப் பின், ஆனையின் அசதி தான். முதிர்ந்த யானைகள் கூட்டத்தோடு சேர்வன அல்ல.
இவை யாவும் நடக்கும் நேரத்தில், அனிருத்தன் வேத கோஷ்டியோடு அளவாளிக் கொண்டிருந்தார். யானையை பாகன் மெல்ல அதட்ட, கோஷ்டி மீண்டும் அந்தாதியில் ஆழ்ந்தது.
நால் வீதியும், குளமும் என ஒரு சுற்று முடிந்து, இராமானுசர் திருமேனி கோயில் முன் மண்டபம் அடைந்தது. பட்டாச்சாரியர் தூப தீபங்கள் காட்டி நிவேதனம் செய்தார். அர்ஜுன் பட்சி தாத்தாவின் கைகளைப் பிடித்த படி, பூசையைக் கண்டு களித்தான்ந்த. இராமானுசர் தொடங்கி, அடியார்க்கு அடியார் என நீண்ட பரம்பரையில் தானும் இனி ஒரு அங்கம் என்பது பூரிப்பாக இருந்தது. பெருமானை இனி நானும் சுமப்பேன் என உறுதி கொண்டான்.
அமைதியாக நின்றிருந்த யானை, மெல்ல இராமானுசர் திருமேனி முன் வந்து, மண்டியிடுவதுப் போல் பின்னங்கால்களை மடித்து, துதிக்கையை நிமிர்த்தி, பிளிறிக்கொண்டு சலாம் போட்டது. மெல்ல எழுந்து, துதிக்கை உயர்த்தி கவரி வீசியது.
பாகன் எதிலும் தொடர்பில்லாமல், அமைதியாக யானையின் பாவனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
– இன்னும் வெளிவராத ‘பாடுவான் நகரம்’ நாவலின் டீஸர்.
ஆர்.கே.ஜி