“தென்னைகளுக்குப் பின்னால் உயர்ந்து நிற்கும் ஒற்றைப் பெருமரத்தில் – வழக்கமாக சாயங்கால வெயில் இறங்கியதும் எங்கிருந்தோ வந்து அமர்ந்திருக்கும் அந்தக் கிருஷ்ணப் பருந்து, அதைக் கூட இன்று காணவில்லை. வழக்கமாக அது அந்த மரக்கிளைகளில் வந்து அமரும் போது, உள்ளத்தில் ஒரு உணர்வு எழுவது உண்டு. தன்னை யாரோ முதுகிற்குப் பின்னால் பார்ப்பது போல.”
ஆ. மாதவன் பெரும்பாலும் தன் இயல்புவாதக் கதைகளுக்கு பெயர் போனவர். குறிப்பாகத் தெருக்களின் இயங்குவியலை துல்லியமாக சித்தரித்தவர். அவர் எழுத்துக்கள் இன்று ‘தெரு இலக்கியம்’ என எழுத்தாளர்களால் கொண்டாடப்படுகிறது. திருவனந்தபுரமும், இரு மொழிக் கலந்த மனிதரும், சாலைத் தெருக்களும் அவர் உலகம். கிருஷ்ணப் பருந்து நாவல் 80 ல் வெளி வந்தது.
மிகை இலா எழுத்து ஏதோ ஒரு வகையில் மிகையிலா மனிதரை சித்தரிப்பதினால் சாத்தியமாகிறது. பெரும் கனவுகளும், காழ்ப்புகளும் இன்றி, எங்கோ ஒரு மூலையில், காலத்தை அதன் சுழற்சியுடன் எதிர் கொண்டு லயமாக ஓடுகிற எளிமையான மனங்களால்.
கனவுகளும், வாதங்களும் கொண்ட மனம் தட்டையாகவும், இறுக்கமானவரின் மன வாசகங்கள் சிக்கலாகவும் இருக்க, எளிமையான மனிதர்களின் களம் மட்டுமே ஓர் நிலைக்கு மேல் நம்மை வசீகரிக்கிறது. ஆ. மாதவன் பசும் வயல், குளம், தேவி கோயில், முதிர்ந்த குருஸ்வாமி, பையிண்டர் ரவி, அடாவடி வேலப்பன், வெகுளி ராணி என எளிமையின் உருவங்களைக் கொண்டு நாவலாகப் படைக்கிறார். எளிமையைப் பேசுதல், சாதாரணம் அல்ல, ‘சாதாரணத்துவத்தின் கலை’.
அட என்னப்பா, தினமும் பார்க்கிற இவங்களப் பத்தி என்னத்தப் பேசிண்டு. நாவல்ல வேற ஒரு உலகம் தெரியவேண்டாமா. தத்துவம், வரலாறு. நமக்கு அன்னியமான … விறுவிறுப்பான … பக்கங்களை அனாயசமாத் திருப்பக் கூடிய …
சத்தியமாக, இவர்களுக்கு ஆ. மாதவனோ, நீல பத்மநாபனோ எக்காலத்திலும் புலப் படப் போவதில்லை.
கிருஷ்ணப் பருந்தில் காமத்தை, எளிமையின் அடையாளங்களோடு ஆ.மாதவன் கோர்க்கிறார்.
குருஸ்வாமி ஊர் பெரியவர். கிராம சனங்களால் ஏகோபித்தமாக ஏர்க்கப்பட்டவர். உறவுகள் இல்லை. மனைவி போய், சன்னியாசியாகத் தனித்து இருப்பவர்.
“நீங்க சொன்னேளே … காமாக்னியை வென்ற அகிலாண்ட பரமேஸ்வரின்னு. அதுக்கொரு ரூப விளக்கமும் சொன்னியோ. திரண்ட முலையும், திறந்த பெண்மையுமாக, ஜனன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி, அத்தனைக் காம வெறியும் பஸ்மீகாரம் செய்துவிட்டு காம சொரூபியான, திறந்த நிற்வான நிலையின் அந்த விஸ்வரூபத்தை உள் பிரகாரச் சுவரில் வரைஞ்சேன் என்றாலும், இன்னைக்கும் ஜ்வர வேகம் கொண்டது போல், நெஞ்சு பதறி சுடுது.”
ரவி கோயில் சுற்றில் குருஸ்வாமியின் வாக்கியங்களைக் கொண்டு வரைந்த தேவி சித்திரத்தை நினைவு கொள்கிறான். பிரக்ஞையால் தேவியின் சொரூபத்தை இவ்வளவு விவரிக்கக் கூடிய குருஸ்வாமி அவனுக்குப் பெரிதாகத் தெரிகிறார். ஆனால் காலப் போக்கில் இது மாறுகிறது.
“கோவில் சுவரில் அந்த ஓவியம் போல திரண்ட முலையும், திறந்த பெண்மையுமாக ஜனன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி, அத்தனை காமாக்னியும் ஊதி அகற்றி விட்டு, பின்னும் காம சொரூபியான அகிலாண்டேஸ்வரி…
அவளது வார்சடை சிலிர்ப்பில் சுரியன் நெருப்புக் கிரணங்களால் வளர்கிறான்… அம்மு அம்மேய். சூரிய கிரணத்தின் பொன்னொளி நடுவே அம்மு அம்மா இறங்கி வருகிறாள். மெல்ல மெலிதாக. தொட்டில் ஆட்டும் மென்மை ஊசலில் அம்மு அம்மா தவழ்ந்து வருகிறாள். அருகில்.. தொட்டு அருகில்.. என்ன இது மனைவி சுப்புலட்சுமியா, இல்லை… ராணி குழந்தையுடன் நிற்கிறாள்.”
குருஸ்வாமி, நிதர்சனத்தில் தனித்து இருப்பவர். ஏதோ ஒரு திவ்ய சீண்டலுக்கு, தொடுதலுக்கு ஏங்குகிறார். இந்த வரிசையின் அழகைப் பாருங்கள். ஜனன உறுப்பினுள் அண்ட சராசரத்தை அடக்கும் அகிலாண்டேஸ்வரி, அதன் பின் சொல்வது குருஸ்வாமியின் அன்னையை, அதன் பின் அவர் மனம் மறைவாக நாடுவது இராணியின் தொடுதலை.
மிகக் கொச்சையாகக் கடக்கக் கூடும் வாக்கியங்கள் இவை. தொட்டாலே கற்பு போய் விடும் என வாதிடும் நாட்டில் இவ்வரிகள் இத்தனைக் கவிநயத்தோடு எழுதுவது சாத்தியமா என்றே புரியவில்லை.
பொதுவாகவே நமக்குக் காமத்தைப் பற்றி குழப்பமான நிலை தான். ஒரு பக்கம் காமத்தை சிருஷ்டிக்கு பீஜமாகவும் (விதையாகவும்), மறு பக்கம் மூன்று கன்மமாகவும் வைக்கிறோம்.
காமம் பிரபஞ்சத்திற்கு உகந்ததாகவும், பிரபஞ்ச வாசிகளான நமக்கு எதிர் மறையாக எப்படி போகக் கூடும்?
காமமே எந்த ஒரு இயக்கத்தின் அடி நாதம். அசையாத பொருள் அசைவது, இச்சையால் மட்டுமே. கனவு காட்சிகளாகி, அது மேலும் இச்சைகளை கிளறி, வண்ணப் படையலாக நமக்கு பூமி தருகிறது.
மஞ்ஞூ காலம் வரும் நேரம்
மாவுதோறும் பூவு காணாம்
மஞ்ஞூ நீங்கி வேனலாயால்
மாடம்பழத்தின் காலமாயி
வேனல் போயி – மழ வந்தால்
பின்னே வள்ளம் களிதென்ன …
வள்ளக் களி … காமம் நீரின் களியாட்டம்!
ராணி தானாகவே அவரை இறுக அணைத்தாள். அவரது முகத்தோடு நெருங்கி “எப்படியும் கொண்டு வந்திரணும் ஸாமியப்பா…” என்று அந்த உதடுகளில்…
“ராணி விடு என்னை”
மொட்டை மாடியில் குருஸ்வாமியின் தாடி கம்பீரம் நிறைந்த உருவப் படத்தை, புதிதாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராணி!
கம்பீரமாய் நிற்கும் சாமியாராக குருஸ்வாமி மீண்டும், காமம் கடந்த அடுத்த நொடியில்!
குருஸ்வாமி உண்மையில் யார்!! எதன் பிரதிநிதி?
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
– குறுந்தொகை
முற்றா இளம் புல்லை நாடும் முதிய பசு, சுவைப்பது புல்லை அல்ல. அனாதியாக அது தன்னைத் தானே சுவைத்துக் கொண்டிருக்கிறது. இச்சையே அதன் நாவுக்கு நீர்.
குருஸ்வாமி, மிளைப்பெருங்கந்தனார் காட்டும் பசுவாகவே தெரிகிறார். ஜனனி எனும் லோக அன்னையும், அம்மையும், ராணியும் இப்பசுவின் நாவுக்கு நீர்!
– ஆர்.கே.ஜீ.
– 21, ஜூலை, 2018 விகடகவி இணைய இதழில் வெளியானது
எழுத்தாளர் திரு.ஆ.மாதவன் பற்றிய சிறந்த அறிமுகம். கிருஷ்ண பருந்து இவருடைய நல்ல கதை.
LikeLike
நன்றி சார். தங்களின் வரலாற்று பதிவுகள் அரிய தகவல்களுடன் இருக்கின்றன. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும். – இராம்
LikeLike
தங்கள் மேலான வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..
LikeLike