லௌகீக ஞானம்(நி)

ashoka.jpg

இலக்கியம் ஒற்றைக் குரலாக மாறாமல், ஓர் பரந்த வெளி நோக்கி செல்ல, ஆசிரியன் முதன்மையில் தன்னைக் கடக்க வேண்டியுள்ளது. படைப்பைக் கலையாக்க, அவன் உதிர்க்கும் பகட்டான சித்தரிப்புகளும், உருவகம், உவமம் யாவும் புறம் தரும் உண்மைக்குத் திரையாக மாறிவிடுகின்றன.

புறம் எனும் நிகழ்தலின் வழி, காட்சிகளாய் நாம் அடையும் சாராம்சமே அகம். பெரும்பான்மையான எழுத்தாளர்கள் புறத்தின் குரலுக்கு முழுமையாகப் புலன் சாய்க்காமல், உள்ளத்தில் எழும் உணர்வுப் பிரவாகத்திற்கு (Stream of consciousness) புறத்தைத் தடையாகக் கொள்கின்றனர். பல நேரங்களில், வரலாற்றின் பெரு நிகழ்வுகள் கூட, ஆசிரியர் தன் சுய நோக்கால் கடந்து போகக் கூடும். இதற்கு மாற்றாக, புறத்தின் குரலை, அதன் சத்திய ஒலிகளை கலப்பின்றி நமக்கு சேர்த்தவர் அசோகமித்திரன். கவித்துவ எழுத்து கலை என சொன்னால், பூடகமற்ற ஓர் புறத்தை, காட்சிகளின் தொகுப்பாக்கும் இவ்வகை எழுத்தும் கலையே.

அசோகமித்திரன் ‘தண்ணீர்’ நாவலில் சித்தரிப்பது மத்ராஸ் எழுபதுகளில் எதிர் கொண்டத் தண்ணீர் தட்டுப்பாட்டின் ஓர் கூர் படிமம். கணையாழியில் தொடராக எழுதி, 1973ல் வெளியிடுகிறார். அசோகமித்திரனின் பெரும்பான்மையானப் படைப்புகள் போன்று, சென்னையும், லௌகீக இறுக்கமும், தனித்துவமானப் பெண்களும் என நாவல் இரு தளங்களில் விரிகிறது.

“லாரியின் சப்தம் கேட்டவுடனேயே, ஒவ்வொரு வீட்டிலிருந்தும், ஆண்கள், பெண்கள், பெரியவர், சின்னவர், பள்ளிக் கூட வாத்தியார், பதிவு பெற்ற அதிகாரி, பழக்கடைச் சொந்தக்காரர் எல்லாரும் ஆளுக்கொரு தவலை டிரம், பக்கெட் முதலியன எடுத்துக் கொண்டு லாரியைச் சூழ்ந்துக் கொண்டே லாரியுடன் நகர்ந்தார்கள். ஆளுக்கொரு தவலை, டிரம், பக்கெட் முதலியன எடுத்துக் கொண்டு லாரியை சூழ்ந்துக் கொண்டே லாரியுடன் நகர்ந்தார்கள்.

லாரி டிரைவர் காறித் துப்பிவிட்டு ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். லாரியொடு வந்த உதவியாளர்களில் ஒருவன் ஒரு பெரிய ஹோஸ் பைப்பைத் தூக்கிக் கீழே போட்டான். அது லாரியைச் சூழ்ந்து நிற்பவர்கள் மீது விழுந்து, அங்கிருந்து தரையில் வீழ்ந்து, அதன் நுனிப்புறத்தில் நிறைய மண்ணையும் சாணத்தையும் பூசிக் கொண்டது. அந்த ஆள் அன்று விசேஷ பிரயத்தனங்கள் எடுத்துக் கொண்டு அந்த மலைப் பாம்பின் முழு நீளமும் இழுத்து அதன் நுனியைத் தெரு தண்ணீர் டாங்கின் மேல் இருந்த துவாரத்தில் நுழைத்தான்.”

இத்தகு நுண் சித்தரிப்புகளால் வாசகன் தத்துவ தளத்திற்கு செல்ல இடமில்லை என வாதிடலாம். தத்துவமும், வரலாற்று உணர்வும் இலக்கியம் தொட்ட உச்சமாக இருக்கலாம், ஆனால் இலக்கியத்திற்கு அவை அடிப்படை என சொலல் ஆகாது.

புறக்காட்சிகளின் விவரனை வாசகனை ஓர் உலகில் அனாயாசமாக ஆழ்த்த வல்லன. மலைப் பாம்பை போன்ற ஹோஸ் பைப்பை மெத்தனமாக லாரிக்காரன் கிடாசுவது போன்ற படிமங்கள், நமக்கு பரிட்சயமான ஓர் உலகை நமக்குத் தரக் கூடியவை. இதில் உருவகம், உவமத்திற்கு இடம் இல்லை எனினும், பரிட்சயமே யுக்தி. இந்த யுக்தியைக் திறம் பட கையாண்ட, ஆ. மாதவன், சா. கந்தசாமி என நெடிய மரபு தமிழில் உள்ளதுக் குறிப்பிடத்தக்கது.

கொந்தளிப்புகளும், பதபதப்புமின்றி, தொடர் விவரனை மூலம் மட்டுமே கோர்க்கப் பட்ட படைப்புகள் இவை. ‘zero narration’ என எழுத்தில் இதைக் குறிக்கின்றனர்.

டீச்சரம்மா, “எனக்கு பாஸ்கர் ராவ் மாதிரி ஆளுங்களைத் தெரியும். உன் மாதிரிப் பெண்களையும் தெரியும். ஒரு பொண்ணு இடம் கொடுக்கலைன்னா ஓர் ஆண் அவகிட்ட நெருங்க முடியுமா?”

ஜமுனா, “நீங்க நினைக்கிற மாதிரி இல்லேக்கா” என்று ஆரம்பித்தாள். டீச்சரம்மா, “உடனே அழத் தொடங்கிடாதே. எனக்கு இந்த அழுகையெல்லாம் பாத்துப் பாத்தே எனக்கு அழுகையே வராம போயிடுத்து. நான் ஒண்ணும் உன்னைப் பத்தி நினைச்சுடலே. நாம நடந்ததெல்லாம் சொல்லணும்னா மூணாம் வயசிலே ஆனதெல்லாம் அறுபது வருஷங்களிலே கூட சொல்லி முடியாது.”

இறுக்கமானக் கதைகளை ஏன் இப் பின்னனியில் சொல்ல வேண்டும்? ஒரு பக்கம் தெருவின் பிரஜைகளுக்கும், மெத்தனமான அரசு பணியாட்களுக்கும் இடையே மூண்ட அமளியும், இன்னொரு பக்கம், சப்தமின்றி ஒரு பெண் வாழ்வைத் துறக்க முனைவதும்.

இக் காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்தோம் எனில், அமளியும் அசப்தமும் கடந்து மிஞ்சுவது நாடகத் தனமே. தத்துவம் கழன்ற ஓர் பிடிப்பற்ற நிலை.

3427117.jpg

தத்துவ வாதிகள் நீர் தனக்கென குணங்கள் அற்றது, பிரவாகமாய் ஓடியும், தேங்கியும், இடத்தின் அமைப்பிற்கு மாறக் கூடியது. ஆதலால் பெண்களும் நீரின் பிரதிகளே என நார்ய பூஜை செய்யக் கூடும். அசோகமித்திரனுக்கு நீர் என்பது தண்ணீர். அவ்வளவே.

“எனக்கு பயம் இல்லாமல் இல்லை. ஆனா ஒண்ணும் பண்ணிக்கிறது இல்லைன்னு மட்டும் தீர்மானம் பண்ணிண்டேன். பார்ப்போம். எப்பவோ நடக்கப் போறதுக்கு ஏன் இப்போலேருந்தே கவலைப் பட்டுண்டு இருக்கணும். இன்னைக்கு சந்தோஷமா இருந்துடலாம் வா.”

அசோக மித்திரனைப் பெரிதும் கவர்ந்தது, இத்தகு மனித பாவனைகளே அன்றி தத்துவம் அல்ல.

“ஒரு சில நிமிடங்களுக்குள் தெரு தண்ணீர் டாங்கி நிரம்பி, மேலேயிருந்த ஒரு ஓட்டை வழியாகக் கொட்டியது. அதைப் பிடிப்பதற்கு இன்னொரு கும்பல் கையில் கிடைத்த பாத்திரங்களுடன் மோதிக் கொண்டு தள்ளிக் கொண்டிருந்தது.”

அசோகமித்திரன் ஒவ்வொருப் படைப்பிலும், லௌகீக ஞானத்துடன் பெரும் கடல்களைத் தாவுகிறார், நம்மையும் தோளில் சுமந்தப்படி.

“ஜமுனாவின் பிடியையும், இன்னும் யார் யாருடைய பிடியையும் உதறிவிட்டு அவளாகவே தட்டு தடுமாறி போகலானாள்…”

–    ‘விகடகவி’ இணைய இதழில் 30-6-2018 அன்று வெளியானது.

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: