பாடுவான் நகரம் 

பாடுவான் நகரம் 

அரங்கமாநகர் விழித்தது. காகங்கள் மொட்டை கோபுரத்தில் அமர்ந்து, விடியலைக் கரைந்தழைத்தன. காவிரி, குடையாக நின்றத் தென்னைகளைத் தழுவி நகர்ந்தாள். நகர் காணும் விடியலை வடபத்ரர் இன்றும் ஏற்றார். இரவின் பனி, நகர் முழுதும் ஓர் அங்கதக் குளிரைப் போர்த்தி நின்றது. அம்மா மண்டபம் நுழைந்த வடபத்ரர், கூர் மூக்கில் நின்றக் கண்ணாடித் திரையின் வழியே, சுழித்தோடும் காவிரியைக் கண்டார். காவிரி அவர் அளவில் கோதையே. கண் எட்டும் தொலைவில், நதியின் மடியில் வேளாளர் நட்ட பசும் நெல், நதி மீது வீசும் காற்றால் அசைந்தாடியது. மூப்பரியாக் காவிரிக் கோதையின் பட்டாடைக் காற்றில் அலைவதுப் போல் அக்காட்சித் தோன்றியது. அக்கணம் வடபத்ரரின் பின் மாட்டில் ஓர் மங்கிய ஒலி எழ , ஒலி எழும் திசை நோக்கித் திரும்பினார். அவ்வொலி, அள்ளித் தழுவ வரும் சிறுமிப் போல் குதித்து வந்தது. பேரி ஓங்க,  முழவதிர கோவில் ஆனை, முன் செல்லும் பாகனை சிறிதும் மதியாது, தன் போக்கில் மண்டபத்தின் வாயிலை அடைந்தது. தன் சிறு கண்களில் நதியின் விஸ்தாரக் காட்சியைக் காண முயன்றது. ஆனையின் மேல் தளத்தில் அமர்ந்த பட்டர், தன் வயிற்றோடு நீர் கலசத்தை அணைத்துக் கொண்டு, ஆனையின் அசைவிற்கு ஈடுக் கொடுத்துத் தள்ளாடி அமர்ந்திருந்தார். பட்டரின் பின் வாக்கில் அமர்ந்தக் கோவில் பணியாள் கவரி வீச, ஆனைப் படி இறங்கும் பத்தினிப் போல், ஒவ்வொருப் படியிலும் மூச்சிரைத்து, கால் பதித்து இறங்கியது. படித்துறையின் கடைப் படியில் பின் கால்களை மடித்து, சீராக நீரில் தன் முன் கால்களை நீட்டி அரை மண்டியிட்டு அமர்ந்தது. ஆனைத் தாழ, பட்டர் தன் கலசத்தில் நீர் மொண்டு நிரப்பினார்.

கர்மம் முடிந்த மாத்திரம், ஆனைத் தன் பாகனின் எவ்வித போதனையுமின்றி அசைந்தெழுந்தது. மந்திர உச்சாடனத்திலிருந்த பட்டர்,  பத்ரரைக் கண்ணால் குசலம் விசாரிக்க, ஆனைப் படித்துறை விட்டு அயர்ப்பில் நகர்ந்தது. கவரி வீசியப் பணியாளன் ஆனை மண்டப வாயிலைத் தொடும் நேரத்தில், முதுகு வளைத்து நதியைக் காண, ஆனையுடன் அவனும்  பெருமூச்சிட்டப்படி நகர்ந்தான்.

புலரியில் , அம்மா மண்டபம் ஆங்கிங்கு இரண்டு மூன்று பார்ப்பனர் திரிவதின்றி, நதியுடன் தனிமையில் கிடந்தது. ஆயன் ஒருவன், பசுவை நீருள் அமர்த்தித் தானும் குளியலில் ஈடுப்பட்டான். நீரின் போக்கிற்கு, பசுவின் மணி ஒலித்துக் கொண்டிருந்தது. இக்காட்சிகள் யாவும் பத்ரரின் கண்களில் இறைவன் வரைந்த சித்திரமாகத் தெரிந்தது. வைணவப் பெரியவர் ஒருவர், காவிரி ஒக்கும் நதியும், அரங்கம் ஒக்கும் கோவிலும் இல்லையென்றால், வைகுண்டம் துறந்து அரங்கம் திரும்புவதாகத் துணிந்து மொழிந்ததை பத்ரர் எண்ணிக் கொண்டிருந்தார். பத்ரர் தானும் இறைவனால் தீட்டப்பட்ட சித்திரம் என்பதை உணராதில்லை.

பத்ரர் அரங்கத்தில் மூக்கன் என்றும், அரையர்சாமி என்றும், பாடுவான் என்றும் பலப் பட்டங்களைக் கொண்டிருந்தார். கண்ணாடிக் குழித்தக் கூர் மூக்கும், ஆந்தைக் கண்களும், தென்கலை நாமமும், நரைத்த முடியும், அந்தத்தில் முடித்த சிகையும், வாயில் குதப்பும் வெற்றிலையும், நிமிர்ந்த மார்பும், கொழுப்பேறா சருமமும், அரையில் சாத்திய பஞ்சகஜமும், ரப்பர் செருப்பும் அவரை அடையாளம் செய்தன.

வடபத்ரர் இயன்ற வரை மோன அனுபூதியில் லயித்தார். அவர் அகம் அரங்கனை மிக அணுக்கமாகவும், தொலைவிலும் காணும் விந்தையை அறிந்திருந்தது. சந்தி வந்தனம் முடித்து, தன் வீடு நோக்கி நகர்ந்தார். பாடுவான் வீதியில் நுழைய, தன் வீட்டின் திண்ணையில், உடல் வெளுத்த, ஒடிந்தப் பெரியவர் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். பெரியவரின் கண்கள், குழியுள் தவறி வீழ்ந்தனப் போலத் தோன்றின. உடல் மீனின் சருமம் போன்றுத் திகழ்ந்தது. தென் கலை நாமமிட்ட கரும் நெற்றி. தேசுக் குறைவில்லை. வீட்டில் நுழையும் முன், பெரியவரின் தீர்க்கக் கண்களைக் கூர்ந்தார்.

“மாமா நீங்க யாரு?”

“தேசிகன்.”

“ஏதாவது சாப்டேளா?”

” எதுவும் வேணாக் குழந்த. உன்னைப் பார்க்கணும் தான் அல்லிக்கேணிலேர்ந்து வந்திருக்கிறேன். வயசு என்பதாகுது. பன்னாத தத்துவ விசாரம் இல்ல. ஆகமம், தந்திரம்னுப் பொறட்டி பொறட்டி, இதோப் பெருமாள் அடுத்தப் பக்கத்தில விளங்கிடுவார்னு ஓஞ்சது தான். பக்தி  பாவம் கூடவே இல்ல. ஆனா, புத்திக் கடந்த நிலைல நீ இருக்க .. உன் கால சேவிச்சுட்டுப் போலாம்னு தான். அரையரில் ராஜா டா நீ. பெருமாள் உனக்காக இறங்காத நாளில்லை. வயசால் தானோ என்னவோ, உனக்கு சீடனாக இன்னும் மனம் ஒப்பவில்லை. நல்லா இரு.”

பெரியவரின் கண்கள் குழியில் கைப்பிடித்தேறி, பத்ரரின் இறுகியக் கால்களை சேவித்து மீண்டும் குழியுள் விழுந்தன. பத்ரர் செய்வதறியாது திகைத்து நின்றார்.

பெரியவர் தளர்ந்து, மெதுவாகத் திண்ணையிலிருந்து எழுந்து, பாடுவான் வீதியை அடைந்தார். மீண்டும் பத்ரரின் கண்களைக் கூர்ந்து, தன்னுள் எழும் சப்தங்களை அடக்கி, வீதியை விட்டு மறைந்தார்.

பத்ரர், கிணற்றடியில் பின் கால்களைக் கழுவியப் படியே , சுய விசாரம் செய்யத் தொடங்கினார். பெரிவரின் சொற்கள், குழித் தாளமிடும் அற்ப அரையனுக்கு மிகையானவையே. அரங்கன் அவர் வழியே மாயயைத் தூண்டுவதாக எண்ணிக் கொண்டார்.

ஆனை சடங்காக கவளத்தை விழுங்குவதுப் போன்று, வந்திருந்தக் கோவில் பிரசாதத்தை உண்டார்.

பின் பகலில் பத்ரரின் வீட்டுத் திண்ணையில் மூன்று வைணவப் பெரியவர் கூடி, தம் ஈர வேட்டி திண்ணை மண்ணில் உராச அமர்ந்தனர். எதிர் திண்ணையில் அமர்ந்த பத்ரர், தீர்க்க கண்ணில் மூவரையும் அசையாதுப் பார்த்தப் படி இருந்தார். மூவரும், கசங்கிய காகிதத்தில் கிறுக்கலாய் எழுதிய வாக்கியங்களைப் படித்து முனகிக் கொண்டனர். மூப்பேறிய இரங்காச்சாரி, தன் ஒடிந்த இடையில் அங்கவத்தை சுற்றி, திண்ணை மேட்டில் துள்ளி எழுந்தார். நரைத்த தாடியும், கார் பிடித்தப் பற்களும், பொக்கை வாயொடும், தாயின் அகக் கனலை சொல்லால் கிளறினார்.

“பட்டுடுக்கும் பாவை … பட்டுடுக்கும் பாவை

அயர்ந்திருக்கும் பாவை… அயர்ந்திருக்கும் பாவை.”

இரங்காச்சாரி அனாயாசமாகக் கண்ணில் நீர் திரட்டினார். இயல்பிலேத் தளர்ந்த அவர் கைகள் மேலும் தளர்ந்து, தாயின் இயலாமையைத் தெரிவித்தன. கைகள் ஏதும் அறியா சிறு பாவை, மையல் கொண்டு, மணம் எதிர் நோக்க, கண்டவாறு உடலில் பட்டுடுத்தும் பாவனை செய்தன. கண்கள், ஆசைக் கொண்டு அலங்கரித்தத் தன் பாவை,  நிலை அறிந்து, சேராக் காதலால் அயர்ப்பில் அழ்வதைத் தெரிவித்தன.  அலங்காரமும் அயர்ப்பும் ஒன்றுத் திரண்டு நாச்சியாரின் நிலையை உயிர் தீட்டினார். திண்ணை சுவற்றில் விழுந்த அவர் அசைவின் ஒவ்வோர் நிழலும், உயிரற்றுத் தளர்ச்சியையேக் கூவியது. இரங்காச்சாரியால் அச்சொற்களை கடக்க இயலவில்லை. பட்டுடுக்கும் பாவை.. பட்டுடுக்கும் பாவை .. குளத்தில் மீன் நெளிவதுப் போன்று, நீந்திக் கொண்டிருந்தார். காலம் கடப்பதை அறிந்து , இரங்காச்சாரியை தன்னைத் தானே ஆசுவாசம் செய்து, “கடல் வண்ணன் இது செய்தார் காப்பார் யாரோ?” என சுவர் மாட்டில் விழும் தன் நிழலை  வெறித்து நோக்கினார். அவர் கண்கள் இன்மையை, மனம் எட்டா மாயனை, மகள் கொள்ளும் பேர் ஆசையை ஒரே கணத்தில் வெளியிட்டன. ஆழ் சூழ் அகல் பிரமத்தை ஜீவன் துறத்துவதுப் போல், மகள் பேதையாகத் திரிகிறாளே எனவும், இதுவன்றி ஓர் பெண்ணின், ஜீவனின் உன்னதத் தேடல் எதுவாகும் எனவும், மால் ஆடும் தாயம் போன்று, விழுந்த திசையில் மனம் நின்றது.

“எம்பெருமான் திருவரங்க மெங்கே?, என்னும் … “

தாய் தீர்வை நோக்கி, அரங்க திசை நோக்கி செல்வதுப் போன்று நகர்ந்து நின்று, நகர்ந்து நின்று அசைந்தாள். நகர்விற்கு ஓர் தாளமும், நிற்கும் நிலையில் தாளமும் அதிர்ந்தன. இவ்வரையில் சுழன்றிருந்த இரங்காச்சாரி, முத்துக்குறிப்பில் தன் அங்கம் முற்ற, திண்ணையில் ஓர் இடத்தில நின்று, நோய் நீக்க வந்திருந்தக் கட்டுவிச்சியின் போதனைக்கு செவி சாய்ப்பதென முடிவேற்றார்.

பத்ரர் திண்ணை சுவற்றில் சாய்ந்தவாறுத், தெருவில் எழும் பகல் புழுதியில் ஆழ்ந்திருந்தார். மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றி செல்லும் வேர்வைப் படிந்த முதியவன், திண்ணைக் காட்சிகளைக் கண்டு, நகைத்து நகர்ந்தான்.

“பார்ப்பானுங்க ஓதுறத விட்டுப்புட்டு ஆட வந்துட்டானுங்க…” அவன் நகைப்பதுப் புரிந்தது.

பத்ரர் சுவரில் சாய்ந்தார். கண்கள் அயர்ந்து மாலையில் விழிப்புக் கொண்டன. விழிக்க, இரங்காச்சாரியும் உடன் வந்த இருப் பெரியவரும் அசர்ந்துத் துயில்வதுத் தெரிந்தது. திண்ணையிலிருந்தப் படியே, வீட்டை எட்டிப் பார்த்த பத்ரர், ஏதும் உண்ணாத பூதம் ஏப்பம் விடுவதுப் போல் அசைவின்றிக் கிடப்பதைக் கண்டார். வீட்டின் அளவை நூறு முறை அளக்கும் தன் பத்தினி போய் சேர்ந்தது முதல், வீடு வாய் பிளந்தப் படி தான் கிடக்கிறது. பிள்ளைகளும் கடல் கடந்தாயிற்று. கிணற்றடி அடைந்து, தொலைவில் தெரியும் மொட்டை கோபுரத்தை நோக்கினார். காலையில் மொட்டை கோபுரத்தில் கரைந்த காகங்கள், மாலையில் அவ்விடமே சேர்ந்திருந்தன.

வெண் மேகங்கள் இரவை அங்கங்கே கோடிட, தாரைகள் அரும்பும் காலத்தில்,  பத்ரரும் இரங்காச்சாரியும் மொட்டை கோபுரம் கடந்து கருட மண்டபம் அடைந்தனர். தெருவெங்கும் மின் விளக்கு சுடர்ந்துக் கொண்டிருந்தது. அவர் கைகளில் பொதிந்த அரையர் குல்லாய், மின் ஒளியில் சுடர்ந்தது. நீலப் பட்டால் குல்லாயை வேய்ந்திருந்தனர். நுனியில் கூம்புப் போன்றப் பித்தளையை அழுத்தி, கிரீடமாக அமைக்கப்பட்டிருந்தது. சங்கும் சக்கரமும் நாமமும் வெண் வண்ணத்தால் தீட்டப்பட்டிருக்க, இருக் காதுகளையும் திரையிடும் வகையில் குல்லாயை அமைத்திருந்தனர். திருமால் மாட்டில் இசைக்கும்  கந்தர்வர் போன்ற பிரமையை, அரையர் இவை அணியும் தோறும் மனதில் தூண்டினர். விரல் இடுக்கில் குழித் தாளத்தை சொருகியிருந்தனர்.

நேராக கர்ப துவாரம் அடைந்து, காலமற்ற, கரு மாக் கண்களோடுக் கிடந்த அரங்கனை சேவித்தனர். யோக நித்திரையில் இருந்த  முடிவற்ற மேனி, கர்ப்பத்தின் எல்லா திசையும் ஆக்கிரமித்து, ஒளியின் சிறுக் குவியலையும் துரத்திக் கொண்டிருந்தது. பட்டர் இருவர் கைகளிலும் துளஸித் தீர்த்தத்தை வார்த்தார். இருவரும் நகர்ந்து, ஆயிரம் கால் மண்டபத்தை அடைந்தனர். நம்பெருமாளின் வருகைக்காக ஈசலாகக் கூடிருந்த சனம் காத்திருந்தது. களிப்பின் உச்சமாக மண்டபம் ஒலித்துக் கொண்டிருந்தது. பத்ரர் ஓர் ஓரமாக சேர்ந்த்து, தூணில் புடைத்த எட்டடி வரை உயர்ந்த அஸ்வ சிற்பங்களைக் கண்களால் வருடிக் கொண்டிருந்தார்.

அக்கணம், பறையும் சங்கும் ஓங்க, பந்தம் சுமப்பவர் மண்டபத்துள் முதலில் நுழைந்தனர்.  நாத வித்வான்களும் அரையரும் தாளமிட்டப் படி தொடர்ந்தனர். தேர் தளம் போன்று அமைந்த சபை, மையத்தில் சிற்பி வரைந்தக் கல் கோலமெனத் திகழ்ந்தது. யாவரும் அச்சபை நோக்கி, மனம் குவிக்க முனைந்தனர். பறை மும்முறை ஒலிக்க, நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். பெருமான் முத்து அங்கி சொலிக்க, வெண் மஞ்சள் சிவப்பொடு கதம்ப மாலை அணிந்து, அபய ஹஸ்தத்தில் பச்சை மரகதம் பொதிக்க, சிரசில் கார் நீலக் கிரீடமும் இடையில் மஞ்சள் பஞ்ச கசமும், பச்சைப் பீதாம்பரமோடு ரங்க இராஜனாக நின்றான். புஜம் புடைத்தப் பல்லக்குத் தாங்கிகள், ஆஜானுபாகுவானப் பிரானை சுமக்க, உடல் வியர்த்து நின்றனர். பெருமானின் கைத்தலும், கண்ணும் காலும் கண்ட சனம், கதிர் நோக்கும் தாமரையாகின. பெருமான் சபை மையத்தில் எழுந்தருளினார்.

நம்பெருமாள் எழுந்தருள, வடபத்ரர் அரையர் குல்லாவை அணிந்துத் திருமாலை எதிர் நோக்கி நின்றார். தாளங்கள் திமிராது அடங்கியிருந்தன. பட்டர்கள் பெருமான் அணிந்தப் பட்டை, குல்லாயின் மீதுப் பரிவட்டமாக சூடினர். பின் நின்ற இரங்காச்சாரியும் இதை ஏற்றார். மங்கள தீபம் காட்டி, பெருமான் எதிர் நின்ற பட்டர் உரக்க ஒலித்தார்.

“வாய்மொழி கேட்கும் பெருமாள் … நம்பெருமாள்.

வாய்மொழி கேட்கும் பெருமாள் … நம்பெருமாள்.”

நம்பெருமாளின் கண்கள்  பத்ரரை சேர்ந்தன. மும்முறைப் பறை ஒலித்தது. காற்று சூழ்வதுப் போல், சபையில் நிசப்தம் சூழ்ந்தது.

இரங்காச்சாரி தாளம் உரச, சப்தம் நிசப்தத்தை விழுங்கியது. பண்ணற்ற, சொல்லற்ற, தாளம் மட்டும்  ஒலிக்க, பத்ரர் பெருமானின் மேனி முழுதும்  உள்  வாங்கிக் கொண்டிருந்தார். தாளத்தின் ஒவ்வோர் அதிர்விலும், ஒவ்வோர் அங்கமும் மனதுள் தையல் கொண்டன.

பத்ரர், இராஜனுக்கு இசைக்கும் இராஜ கந்தர்வனாக உருக் கொண்டார். அவர் கைத்தளத்தில் முதல் ஒலி எழுந்தது. அவ்வொலி தூணில் புடைந்த சிற்பங்களை, வெறித்த மண்டபக் கூரையை அறைந்து, ஒலிக் குமிழிப் போல் அங்கங்கே வெடித்து மறைந்தது.

அரங்கமெங்கும் நிசப்தம். பத்ரரின் மனம் அகாலத்தை அடைந்தது. நாயிகா பாவம் பூண்டார். கண்ணின் நீர் பனி உருகுவதுப் போல் கலங்கி ஓடியது. பராங்குச நாயகியகாக அவர் இடை மெலிந்தொடிந்தது. அமுங்கிய மார் காம்புகள் புடைத்து மேலெழுவதுப் போல் நிமிர்ந்தார்.  பட்டர் சாத்திய ஆறடி வெண் சாமந்தி மாலை அவர் தோள் பாரத்தை ஏற்றியும், நிமிர்ந்து சனத்தை நோக்கினார். சனம் ஏதோ ஆதரவற்றப் பெண் தம்முன் நிற்பதுப் போன்று உணர்ந்தனர். நம்பெருமான் வரத ஹஸ்தத்தால் திருவடி சேவை நிகழ்த்தினான். அவன் இடக் கை, கால் நோக்கியும், கண்கள் வான் நோக்கியும் திகழ்ந்தன. வான் முதல் அடி வரை, விசும்பு சூழ் பரத்தை, பத்ரர் அகக் கண்ணால் விழுங்கினார். மீண்டும் சனத்தைக் கடிந்து நோக்கினார்.குழித் தாளம் அதிர, நீலக் குல்லாயும், பரிவட்டமும் அவர் அசைவிற்கு அசைந்தன. மார்பிற்கு நேராக. தாமரைப் போன்று வலக் கையினைக் குவித்தார். இடக் கை நிலத்திற்கு இணையாக நீட்டி, தாமரைப் போன்றுக் குவித்த விரல்களை நாயகியின் மனம் சுட்டுவது போல் அபிநயம் பிடித்து பராங்குச நாயிகாயகப் பாடத் துடங்கினார்.

“என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே…”

“என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே…”

சாமான்யனின் மனம், இறைவனின் இருப்பை அறிந்தும், அறிய மறுத்தும், அறியாமைல் இருக்க, நாயகி நம்பியின் மேல் கொண்டக் காதலைத் தீவிரமாக உரைக்கிறாள். அவள் அகம் உயிர்த்திருக்கும் வரை, திருமானின் திய்வ சித்திரத்தை அவளால் கடக்க இயலவில்லை.

” தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின்

மின்னும் நூலும் குண்டலமும் மார்வில் திரு மருவும்,

மன்னும் பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே.”

பத்ரர் திருமானின் ஒவ்வொரு ஆபரணமும், நம்பெருமானைக் கை நீட்டி சுட்டியவாறு அபிநயம் பிடித்தார். மார் மருவில் இலக்குமியும் சேர, இவை ஒன்றில் நீ அணிய மறந்தாலும், தொண்டன் தன் மனதுள் தானே அலங்காரிப்பான் என நாயகியாக திருமாலின் சித்திரத்தை சபை முன் வரைந்தார்.

“வந்தெங்கும் நின்றிடுமே…. வந்தெங்கும் நின்றிடுமே.”

பித்தேறிய நாயகியாகத் திருமானைக் கடிந்தப் படி பத்ரர் பார்த்து நின்றார். காட்சிகள் நகர, காலம் நகர்ந்தது. பட்டர்கள், அரையர் சேவை மேல் மரியாதை ஓரளவு இருந்தும்,  முழுமையாகப் பொருந்த மனம் ஏற்கவில்லை. பெருமாளைக் கை நீட்டி சுட்டுவதும், கடிவதும், அவன் திருமேனி மாட்டில் சென்று ஓலமிடுவதும் ஏனோக் கோவில் ஒழுங்கில் இல்லாததுப் போன்று அவர்களுக்கு நித்தம் தோன்றியது. அரையர் சேவை நடக்கும் காலத்தில், தூணில் சாய்ந்து, தன் சால்வையை மார்பில் போர்த்தி, கைகளை அதனுள் இறுக்கி, எதிலும் தொடர்பில்லாது நின்றனர். இந்நேரம் வரையில் தூணில் பல்லி என ஒட்டி நின்ற தேசிகன், ஆவேசம் வந்து சபை முன் வந்தார். மூப்பேறிய அவர் கால்கள், இருளில் வௌவால் திமிறுவதுப் போன்று ஆடின.

“இது உங்க அரங்கம் இல்ல. இது பாடுவான் நகரம் … அரையனின் சிருஷ்டி. தளிகை வெச்சு ஈ மொய்க்காமப் பார்ப்பதில்ல அவன் தர்மம். கசப்பை, சுடும் விடத்தை, உயிர்க் கூவலாய் அரைந்துப் படைப்பான். உங்க ஈன சப்தத்தால் அதை நிசப்திக்காதிருங்கோ.”

“பத்ரா .. நான் கேட்கறேன். நீ பாடுடா.”

பத்ரரின் கால் மாட்டில் தேசிகன் சுருண்டு விழுந்தார். அரங்கன் தேசிகன் மேனியில் ஏறியது யாவர்க்கும் புரிந்தது.

இரவின் களி யாவும் முடிந்து,  பத்ரர் காவிரியின் கரை அடைந்தார். அவர் அகத்துள் இரவின் நிசப்தம் கூடியிருந்தது. இரவில் நீரின் அசைவு மேலும் மோனத்தைக் கிளறியது. இறந்த மனைவியின் சித்திரம் அவர் அகத்தை சுட்டது. ஒவ்வொரு முறை நாயிகா பாவம் பூணும் தோறும், தன் மனைவியை அவர் உயிர் கொள்ள செய்வதை எண்ணினார். அவள் இறந்தப் பின்பு, பத்ரரின் மனதில் கசப்பே எஞ்சியிருந்தது. அவர் பத்தினி இரங்கத்தில் உயிர் விட வேண்டும் என நித்தம் சொன்னப் படியே இருப்பாள். புற்றேறி உயிரும் துறந்தாள்.

பெரிய பெருமானின் கண்களும், நீள் மேனியும், ஆழ் சயனமும் பற்றி அவள் பேசாத நாள் இல்லை.  இடையை வருத்தி,  நாச்சியாராக அரைவது யாவும் அவர் மனைவி இலக்குமியே. மனதை திசைத் திருப்ப, படிகளில் இறங்கி, நதியுள் முங்கி எழுந்தார். முடிந்த பத்ரரின் குழல்கள் அவிழ, எதிர் நீரோட்டத்தில் கால்கள் நிலைத் தவறின. காவிரி தான் விரஜை என்பதில் சிறு கர்வமுமின்று ஓடிக் கொண்டிருந்தாள்.

அரங்கம் உறங்கியது.

– ஆர்.கே.ஜி.

Published by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)

எழுத்தாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: