
இன்றைய இலக்கியம் சமூக இயக்கவியலை முற்றிலும் நிராகரித்து எழுதப்படுவதாக உணர்கிறேன். வரலாற்றுக்கு அடிப்படையில் இலக்குகள் இல்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிப் பெரும் அர்த்தமின்மையைத் திணித்து, வரலாற்றின் அசைவுகளாகப் பலர் சித்தரிக்கின்றனர். இதனால் கசப்பான, அவநம்பிக்கையில் விளைந்த படைப்புகளே மிகுதியாகக் கிடைக்கின்றன. வரலாற்றின் எந்த ஒரு கணமும், வாழ்வின் எந்த ஒரு கணம் போலவே அர்த்தமும் அனர்த்தமும் சேர்ந்து அமைந்திருக்கக் கூடும்.
பாடுவான் நகரத்தில், விமர்சனம் கடந்த ஒரு வரலாற்றை, தொன்மங்களை படிமங்களின் தொகுதியாக்கி ஒரு தரிசனத்தை உருவகிக்க முனைந்தேன். தொன்மங்கள், அதன்வழி வந்த தெய்வங்கள், இவைகள் வரலாற்றில் அடையாளம் காணப்படும் கணங்கள் எனச்சில இந்நாவலில் வாசகர்களால் அடையக் கூடியவை.
பரசுராமனுக்கும், மாஹிஸ்மதியை ஆண்ட ஹைஹேயனான கார்த்தவீர்யனுக்குமான நிலப்போர், மத்திய தேசத்திற்கு சிறிதும் சம்மந்தமில்லாத கேரளத்துக்கு தொன்மமாக மாறுகிறது. கேரளம் ‘பரசுராம க்ஷேத்திரம்’ எனத் தன்னை இன்று அடையாளம் காண்பதின் முரண் எவ்வாறு உருவானது? நமக்குக் கிட்டிய வரலாற்றின் சில பக்கங்களை மட்டும் புரட்டி, முற்றிலுமாகத் தொன்மங்களை ஒதுக்குவது அறிவார்ந்த செயல் அல்ல. எந்த தொன்மமும் இல்லாத ஒன்றைப் பேசக்கூடியதல்ல. தொன்மங்களில் பெயர், நிலம், காலம் மாற்றம் கொள்ளுமே ஒழிய, கதைகள் காலம் கடந்து வரக்கூடியவை.
எனவே தொன்மத்தை ஏற்றோ அல்லது எதிர்த்தோ வாதங்களைக் கோர்க்காமல், பரசுராமன் என்ற தொன்மத்தை உயிர்ப்புடன் படைக்க விரும்பினேன். மழுவாள் ஏந்தி அவன் போர் செய்த வன்மமும், பித்தனாக, துறந்து மீண்டவனாக அவன் அடைந்த பரிணாமங்களை உருவகித்தேன். இவை ஆய்வாளனின் பார்வையில் எழுதப்பட்டவை அல்ல. கற்பனை தரும் உச்சத்தில் எழுத முனைந்தவை மட்டுமே.
இவை போக, நாவலில் வரும் நிகழ்காலக் கதை மாந்தர்களான பரஸ், ரேணு அவரவர் தமக்கு உகந்த உன்னதம் நோக்கிச் செல்கின்றனர். நான் வாசகர்களுக்குத் தர எண்ணியது ஒரு கனவு. வரலாற்றை எளிய மகத்தானப் பயணமாக கொண்டோமெனில், காசி இயல்பாக இலக்காக அமைந்து விடுகிறது. 2016 – 2018 வரை தில்லியில் பணி புரிந்த காலங்களில், காசியை நெருக்கமாகக் காணும் வாய்ப்பு அமைந்தது. உண்மையில், வரலாற்றின் எச்சங்கள் காசியில் இன்று மிகச்சிறு அளவே காணக் கிடைத்தன என்றாலும், இந்திய நிலத்தின் முகங்களை, நம்பிக்கைகளை ஒரு தொகையாகக் காண காசி உதவியது.
நாவலின் வடிவமைப்பு குறித்து பக்கம் பக்கமாய் பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாவல் முரண்களின் வழி உண்மையை தரிசிக்கும் பயணம் என நம்புகிறேன். வரலாற்றைக் குறித்த எள்ளல், பதைப்பு ஒருபக்கம் இருந்தாலும், இந்நாவலில் வரும் அர்ஜூன் போல் நம்பிக்கைகளை, தொன்மங்களை அன்புறத் தழுவும் மனித மனத்தை ஒரே தளத்தில் வைத்து இந்நாவல் பேசுகிறது.