
அடையாளங்களைப் பொதுவாக மறுக்கிறோம்.
நம் மன உறுதியைக் காட்டவும் ‘அடையாளம் துறந்தவர்கள்’ என்று நம்மைக் குறித்து கொள்ளவும் விரும்புகிறோம். இந்த ஒரு நோக்காலே மொழி, மதம் அல்லது தேசியம் போன்ற எந்த ஒரு அடையாளமும் தீவிரவாதமாக இன்றைய சிந்தைக்குத் தோன்றத் தொடங்கி விட்டது.
அடையாளங்களை துறப்பதால் மட்டுமே ஒருவனை ஞானி என்று சொல்வதற்கில்லை. மனிதன் இன்றும் தர்மம், பொருள், காமம் போன்ற அடிப்படை சவால்களைக் கையாளத் தெரியாமல் திணறிக் கொண்டுதான் இருக்கிறான். நாம் நினைப்பது போல், அடையாளங்கள் எந்த ஒரு நிறுவனத்தின் பிரச்சாரத்தாலும், சித்தாந்தாலும் நம்மிடம் சேரக் கூடியவை அல்ல.
இந்திய தத்துவ மரபு, உடலின் வழி வரக்கூடிய அத்தனைப் பிணைப்புகளையும் கடந்து, சுயமாக சுடரக்கூடியப் பொருளாகவே ‘அகம்’ என்னும் சாட்சியை சித்தரிக்கிறது. எத்தனையோ அடையாளங்களைத் தன் மேல் பூசிக் கொண்டாலும், ‘அகம்’ அடையாளமற்ற சுத்தப் படிகமாகவேத் திகழ்வதாகப் போற்றுகிறது.
பன்மையாகத் தோன்றும் பிரபஞ்சமாகவும் அதுவே.
‘அகம்’ நாவலில் நாம் பொதுவாக எதிர்கொள்ளும் அடையாள நெருக்கடிகளைப் (Identity Crisis) பேச விரும்பினேன். நாவலை எழுதுகையில் இதுவரை உலகம் எழுதிய அனைத்து கதைகளுமே அடையாள நெருக்கடிகளைக் குறித்து பேசியது
போன்ற பிரமிப்பை உணர முடிந்தது. இடம், காலம், உறவு, பாலினம், கலை, சமூகம் என எத்தனையோ நிலைகளில் நிகழும் அடையாள நெருக்கடிகளை இந்நாவல் பேசும்.
ஒல்கா டாகர்சுக் Flights நாவலில் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் உலக சமூகத்தின் சித்திரத்தை முன் வைக்கிறார்.
“Soon we may well say that it’s the cities that supplement the airports, as workplaces and places to
sleep. It is widely known, after all, that real life takes place in movement.”
“வரும் காலங்களில் விமான நிலையங்களுக்குத் துணை என்ற அளவில் நகரங்கள் மாறக்கூடும்.
பணிகளுக்கும் உறக்கத்திற்கு மட்டுமே உதவும் இடமாய் நகரங்கள்அமையும். நகர்தல் என்னும் இயக்கமே வாழ்வின் சாரமாகும்.”
இடத்துடன் மனம் இணையாதிருக்க, இந்தியத் துறவிகள் பொதுவாக எந்த ஒரு இடத்திலும் அதிக காலம் இருத்தலைத் தவிர்ப்பது வழக்கம். இதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகம், எங்கோத் தம்மைத் தொலைத்தது போல் உணரத் தொடங்கி, வெறுமையில் நிலையான ஒரு இடத்தை, தமக்கென அடையாளங்களைத் தேடுகிறது.
துறவிக்கும் சாமானியனுக்கும் இடையில் நிகழும் இந்த முரணியக்கத்தை அடையாளம் குறித்த விவாதத்தின் தொடக்கமாகப் பார்க்கிறேன். இந்தப் புள்ளியிலிருந்து நம் யாத்திரையைத் தொடங்கினால், அடையாளங்களைக் களைவதும் அணைப்பதும் மனதின் மெல்லிய அசைவால் நிகழ்வதை உணரலாம்.
எழுத்தாளன் அடிப்படையில் அபத்த தரிசனவாதி என்பதால், இவ்வகை பாவனைகளுக்கு அப்பால் திகழும் ‘அகம்’ நோக்கி நகரவே விரும்புவான்.